EPS Strong opposition for New laws brought into force

இந்தியத்தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட.

Advertisment

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பானது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திருக்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.