Skip to main content

“போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் இபிஎஸ்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
EPS sheds blue tears for transport workers Minister Sivashankar

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விடுத்திருந்த அறிக்கையில், “‘ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும் இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத அரசாக திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

EPS sheds blue tears for transport workers Minister Sivashankar

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், “போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிசாமி. 96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என உங்கள் அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்களே, அதை நிறுத்தியதே நீங்கள் தானே. 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது நீங்கள் தானே. இதைச் சொல்லி பேருந்தை நிறுத்தினால், மக்கள் திமுக அரசு மீது கோபப்படுவார்கள் என்பது உங்கள் கற்பனை. ஆனால் உங்கள் வேடம், உங்கள் அறிக்கையாலேயே கலைந்து விட்டது. மக்கள் உண்மையை அறிவார்கள். மக்களுக்கு இடையூறாக பொய் சொல்லி ஒரு போராட்டம் நடத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.