EPS says Women are not protected 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் நேற்று (12.01.2025) இரவு மதுபோதையில் இருந்துள்ளார். இவர், நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால், அந்த அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரைப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையைத் தெளிவாகக் காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?. யார் அந்த சார் என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் இதுபோன்ற சார்கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல சார்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.