நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம்  மற்றும் மரியா கிளிட் அகியோர் அடங்கிய அமர்வில் இன்று (01.07.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் காலம் செல்லச் சொல்ல நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற காரணத்தினால் அது குறித்து ஆழமாகப் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன். இருந்தாலும் காவலர்கள், கோவில் காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கிய காரணத்தினால் அவர் மரணமடைந்ததாகப் பத்திரிகையிலும், ஊடகத்திலும் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து நீதிமன்றம்  காவல்துறையின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தால் அதில் ஆழமாகப் பேசுவது பொருத்தமாக இருக்காது. இத்தகைய செயல் கண்டனத்துக்குரியது.

ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று சொன்னால் முறையாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அஜித்குமார் வழக்கைப் பொறுத்தவரைக்கும் அப்படி எதுவுமே பின்பற்றவில்லை. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதன் காரணமாகத்தான் உடலில் பல காயங்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகவே இதனை ஒரு கொலையாகத்தான் பார்க்கப்படுகிறது. இது மிக மிக வருத்தத்திற்குரியது. வேதனைக்கு உரியது. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலமாக எடுக்கப்படும் என்பதற்கு இன்றைய விசாரணையே உதாரணமாகப் பார்க்கின்றோம். 

Advertisment

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து இதுவரை 25 காவல் மரணம் ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது மிக வருத்தத்திற்குரியது. இந்த அரசாங்கம் இன்றைக்குச் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதிலே மிக மிக மோசமான சூழ்நிலையில் இருக்கின்றது. அதுவும் காவல் மரணம் என்பது மிக மிக வேதனைக்குரியது. இது கண்டனத்துக்கு உரியது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் இது குறித்த தகவல் வெளிவந்தபிறகு முழு உண்மை வெளிவரும்” எனத் தெரிவித்தார்.