தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் இன்று (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் மற்றும் எம்.எல்.ஏ நாகநாதன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். 

அதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே கள ஆய்வு நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (22.07.2025) மற்றும் நாளை மறுநாள் 23.07.2025)  மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பரப்புரையில் அவர் பேசுகையில், “இன்றைய தினம் நான் வரும் போது எனக்குக் கிடைத்த செய்தி திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் பிரார்த்தனை செய்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.