/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/com.jpg)
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாளையங்கோட்டைப் பகுதியில் வசிக்கும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (13-06-24) அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், காதலர்கள்இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தனர் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, பெண்ணைப் பல இடங்களில் தேடிவந்த பெண் வீட்டார் பெண் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இரண்டு கார்களில் வந்த 30க்கும் மேற்பட்டோர் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும் பெண்ணை அனுப்ப அங்குள்ள நிர்வாகிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கதவுகளை உடைத்து அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்கள், இருக்கை உள்ளிட்டவையை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல்ராஜா, 5 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-ni_1.jpg)
இதனிடையே, கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்தத்திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)