/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-ni_2.jpg)
பீகாரைச்சேர்ந்த தம்பதியர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்காகச்சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் இருந்தனர்.
இந்த நிலையில், தம்பதியரின் 11 வயது மகனுக்குக் கடந்த சில தினங்களாகத்தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவனது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சிறுவனை அழைத்து சென்றபோது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியதில்தம்பதியர் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனால் அதனைக் குடித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த தி.மு.க அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம்.
மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படைத்தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதி செய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)