அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவருடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 4 நாள் சுற்றுப்பயணமாகத் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு இன்று (18.07.2025) எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வழியில் திருவாரூர் மாவட்ட எல்லையான நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி என்ற பகுதியில் விவசாய நிலத்தில் அவர் இறங்கி அங்குள்ள விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து கொல்லுமாங்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இங்கு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்த மாவட்டத்தில் உள்ள ஒருவர் ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கிறார். வெட்கமாக இருக்கிறது. திமுக செய்கிற தப்புக்கு எல்லாம் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி என்றால் அதுக்குன்னு ஒரு தனித்தன்மை இருந்தது. அங்கே மக்கள் பாதிக்கப்பட்டால் உடனே கொடி பிடித்துப் போராடக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்றைக்கு திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது. இதனை நான் சொல்லக்கூடாது. ஆனால் இதனைச் சொல்ல வைக்கிறார் இங்க இருக்கிற கம்யூனிஸ்ட் தலைவர். என்றைக்குக் கைநீட்டி திராவிட முன்னேற்றத்தில் பணம் வாங்குனீங்களோ அன்னைக்கே முடிந்து போச்சு உங்கள் கட்சி.
இதனை மறைக்க முடியாது. நீங்கள் மறைத்துப் பேச முடியாது. ஏன்னென்றால் திராவிட முன்னேற்றக் கழக கட்சியே வெளிப்படுத்தி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தோம் என்று வெளிப்படுத்திவிட்டது. பணத்தை வாங்கிய காரணத்தினால் இன்றைக்கு மௌனம் சாதிக்கிறீர்கள். மக்களுடைய பிரச்சனையைக் கூட இன்றைக்கு வெட்ட வெளிச்சத்தில் கொண்டு வர மாட்டேங்கிறீர்கள். மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள்?. இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம். கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் சிந்தித்துப் பாருங்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் திமுகவை எதிர்த்து போராடிட்டு இருக்கிறது.
இன்றைக்குப் பஞ்சு விலை கிடைக்கவில்லை. உடனே அண்ணா திமுகதான் அதற்கு போராட்டம் நடத்தி விடிவு காலம் பிறந்தது. இன்றைக்கு நெல்லை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்கிறீர்களா?. கிடையாது. கடைக்கோடியில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் வரவில்லை என்று இன்றைக்குக் காலையில் விவசாயிகள் மீட்டிங் நடக்கும்போது சொன்னார்கள். அதக்கு ஏதாவது போராட்டம் நடத்துகிறீர்களா?. போராட்டம் நடத்தினால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீட்டை குறைத்துவிடுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தயவு செய்து எண்ணிப் பாருங்கள். குறை சொல்வதாக எண்ணிவிடாதீர்கள். இருக்கின்ற எதார்த்தமான நிலையைச் சொல்கின்றேன். கம்யூனிஸ்ட் பேரியக்கம் ஒரு வரலாறு படைத்த இயக்கம். அது மாசுபட்டுவிடக்கூடாது என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு சொல்கிறேன்.
நாங்கள் உங்களைக் குறைசொல்லி கட்சி வளர்ப்பது கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய கட்சி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த கட்சி மக்களுடைய பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லிருந்த கட்சி இன்றைக்குத் தேய்ந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வைத்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டீர்களே. அதுதான் வேதனை அளிக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி மக்களுக்குப் பிரச்சனை வந்தால் குரல் கொடுக்க வேண்டும். அதற்குத் தான் கட்சி வைத்திருக்கிறோம்” எனப் பேசினார்.