Skip to main content

”படுபாதகச் செயல்களுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

eps press statement for tanjore gold jewellery owner issue

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை திருட்டு நகை வாங்கியதாகக் கூறி சமீபத்தில் திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமாசங்கரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனைக் கடித்த கதையாக, திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல்துறை, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீதும் அடக்குமுறையை ஏவி விடுவதோடு மட்டுமல்லாமல், ஆளும் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு செயல்படும் கட்சியைச் சேர்ந்தவரையே கொடுமைப்படுத்திய அவலமும் அரங்கேறியுள்ளது.

 

திமுக அரசையும், அதனை நடத்தி வரும் திமுகவின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் தூக்கிப் பிடித்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளரும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரோஜா கோல்டு ஹவுஸ் நகைக் கடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் என்பவர் காவல்துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நடந்துள்ளது.

 

ராஜசேகர் சில நாட்களுக்கு முன்பு ஒருவரிடம் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி, அவரை விசாரிக்க திருச்சி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ராஜசேகரின் தந்தை  பிச்சைக்கண்ணு பத்தர். மிகுந்த கண்ணியமாக இப்பகுதியிலே வாழ்ந்தவர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், இதுபோன்று செய்ய வாய்ப்பே இல்லை என்பது பட்டுக்கோட்டை பகுதி மக்களின் கருத்து. நகைக் கடைத் தொழிலில் விசாரணை என்பது வழக்கமான ஒன்றுதான் என்று சொன்னாலும், அவருடைய மனைவி லட்சுமியையும் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

 

போராட்ட குணம் உள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார் என்று சொன்னால் அதற்கு காரணமானவர்கள் மீது, ஓய்வு பெற உள்ள நிலையிலாவது தமிழக காவல்துறை தலைவர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ராஜசேகரையும் அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் என்ற செய்தி ஏற்புடையதல்ல. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அத்துறை இல்லாமல் தறிகெட்டு அலைவது, தமிழகத்தை மயான பூமியாக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

 

இந்த ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிப்பதும், நேர்மையாக தொழில் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதும் கொடுமையிலும் கொடுமை. இந்த படுபாதகச் செயல்களுக்கு முடிவுகட்டும் காலம் நெருங்கிவிட்டது. பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர்  ராஜசேகர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

 

காவல்துறையினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ராஜசேகர் அவர்களுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும்; இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.