EPS has no right to blame this regime Minister E.V. Velu

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதமடைந்தது. இந்த பாலம் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்டுத் திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் கடந்த 02.09.2024 அன்று திறக்கப்பட்டது. காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது.

Advertisment

இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த பாலத்தை படிப்பினையாகக் கொண்டு இனி கட்டப்படுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த பாலம் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கன அடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியது. இதனால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கட்டும் போதே இடிந்த கடலூர் சிங்காரதோப்பு பாலமும் உண்டு. விழுப்புரம் தளவானூர் தடுப்பணையும் இடிந்து விழுந்தது உண்டு, உதாரணத்திற்கு, என்னுடைய மாவட்டத்திலேயே அம்மாபாளையத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும், படவேடு - இராமர் கோயில் சாலையில் கமண்டலநதி மேல் கட்டப்பட்ட பாலமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை எங்கள் மாவட்ட மக்கள் மறவமாட்டார்கள். ஆனால் இதையெல்லாம் மறந்து எதிர்க்கட்சி தலைவர் தன் இருப்பிடத்தைக் காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார்.

Advertisment

EPS has no right to blame this regime Minister E.V. Velu

ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் பெய்த அதீத கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 1,75,000 கன அடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர் மழையினால் கீழ்பகுதியில் பாம்பாறு, வரட்டாறு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், மற்றும் குலங்களில் நிரம்பி வெளியேறிய உபரிநீரும் மொத்தம் சேர்ந்து இப்பாலத்தில் அதிகப்படியான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்தது.

இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 54,000 கன அடி தான், "எதிர்பாராத பேரிடர்" காரணமாக அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாகக் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுபாட்டு பொறியாளர்கள் தரத்தினை சோதிக்கின்றனர். முதலமைச்சராக, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியினை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.