“போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - இ.பி.எஸ். கண்டனம்

EPS condemns Struggle is the basic democratic rights of the people

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டங்ஸ்டன் கணிம சுரங்க திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் இன்று (07-01-25) காலை மேலூரில் இருந்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் வரை சுமார் 20 கி.மீ தொலைவு தூரம் நடைப்பயணமாக பேரணி நடத்தினர். இதற்கிடையில், விவசாயிகள் தபால் நிலையத்திற்குச் செல்வதை தடுக்கும் விதமாக பேரிகார்டுகளை மதுரை தமுக்கம் மைதானத்தை அமைத்தனர்.

இதையடுத்து, பேரிகார்டுகளை தாண்டி தமுக்கம் பிரதான சாலைக்கு வந்த 2,000க்கும் அதிகமான விவசாயிகள், மேலூர் பகுதி பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தரையில் அமர்ந்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், காவல்துறையினரோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ள ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், காவல்துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்திவருகிறது.

முறையாக அனுமதி கோரப்பட்டு, மிகவும் அமைதியாக அறவழியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஸ்டாலின் மாடல் அரசு, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி? டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்ப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் மாடல் அரசு நடத்திய தீர்மான நாடகமே அம்பலமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த போராட்டத் தடை மூலம் திமுக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைய ஆதரவாகவே இருக்கின்றது என்ற உண்மை மக்களிடையே உறுதியாகிவிட்டது.

மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காமல், அவற்றிற்கான உரிய அனுமதிகளை வழங்குமாறு ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

admk madurai
இதையும் படியுங்கள்
Subscribe