EPS condemns incident of ADMK executive

தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் 'கொலை கொலையாம் முந்திரிக்காய் நிறைய நிறைய சுத்திவா' என்று பாடித் திரிவதுபோல், தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி, அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர். கணேசன் இன்று (4.11.2024) காலை 5 மணியளவில் வழக்கம்போல் தனது பெட்டிக் கடையை திறக்கச் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். நாட்டாக்குடி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலையை தடுத்திருக்கலாம்.

Advertisment

மற்றொரு நிகழ்வில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர 7-வது வார்டு கட்சி செயலாளர் பி. ரமேஷ் என்பவரை, திமுக நகர மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் கோவி. சக்தி மற்றும் இரண்டு நபர்கள் நேற்று இரவு (3.11.2024) 9 மணியளவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆயுதங்கள் கொண்டு பலமாக தாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ரமேஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் 'கொலை கொலையாம் முந்திரிக்காய் நிறைய நிறைய சுத்திவா' என்று பாடித் திரிவதுபோல், தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தமிழகம் முழுவதும் கடந்த 41 மாத காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள், போதைப்பொருள் புழக்கம் போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று செய்திகள் வருவது வெட்கக்கேடானது.

Advertisment

சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், எங்களது கட்சி நிர்வாகிகள் மீது முன்பகையுடன் அவர்கள் தாக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது என்ற நிலையில் எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கைது மற்றும் எச்சரிக்கை செய்யாத நிலையில், எங்களது கட்சி நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையே பொறுப்பாகும். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலாமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முன்விரோத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.