EPS Condemnation on Private TV reporter incident

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் நேற்று இரவு (24-01-24) செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

Advertisment

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பலைத்தேடி வருகின்றனர்.

Advertisment

இது குறித்த விசாரணையில், கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாகக் காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் நேசபிரபு புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேசபிரபுவை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தைத்தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும்எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னைத்தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாகக் காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த திமுக அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலாகும்.

Advertisment

EPS Condemnation on Private TV reporter incident

பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதி செய்யுமாறு இந்த திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்தி சிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த திமுக அரசின் முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.