Skip to main content

“நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்”- ஈபிஎஸ் & ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23 வயது) கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார்.  தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
 

eps ops

 

 

அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளின் மூலம் கண்டனத்தை தெரிவித்தது. பின்னர், திமுக, அமமுக போன்ற கட்சி தலைமையிலிருந்து தொண்டர்கள் யாரும் பேனர், கட்டவுட் வைக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டனர்.

இவர்களை தொடர்ந்து அதிமுகவும் கட்சி தொண்டர்கள் யாரும் பேனர் அல்லது கட்டவுட் வைக்க கூடது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அதிமுக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அதிமுக தொண்டர்களின் தலையாயக் கடமையாக இருந்திடல் வேண்டும்.

இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும், பல நேரங்களில் அதிமுக தொண்டர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவூட்டி வந்திருக்கின்றார். ஜெயலலிதா வழியில் அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை ஏற்று தொண்டர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

அதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, அதிமுகவினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும், மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும் , விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும்போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதனைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக கொடி யாருக்கு; மோதிக்கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

salem admk flag issue between ops eps team 
கோப்பு படம்

 

சேலத்தில் நேற்று 4 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் சார்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கியத் தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக  அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஓபிஎஸ் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டி இருந்தனர்.

 

இந்நிலையில், சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியின் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் திரண்ட நிர்வாகிகள், அங்கிருந்த அதிமுக கொடிகளை கட்டிக் கொண்டிருந்த தினேஷிடம், ‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எவ்வித  தொடர்பும் இல்லாத நீங்கள் எப்படி அதிமுகவின் கொடியை கட்டலாம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

 

இதற்கிடையில் அங்கிருந்த சிலர் கொடிகளைப் பிடுங்கி வீசினர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார். அதில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சாலைகளில் இருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டன.

 

எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுகவின் பேனர்கள், போஸ்டர்கள்  மற்றும் கொடிகள் கட்டி இருப்பதை  கண்ட இபிஎஸ் அணியினர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். சாலைகளில் கட்டப்பட்டு இருந்த அதிமுக கொடிகளையும் அகற்றினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை ஓபிஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது இபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நுழைந்து அதிமுக கொடியை அங்கிருந்து அகற்றினர். பின்னர் இபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட  29 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கூட்டம் முடிந்த நிலையில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிக் கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என ஓபிஎஸ் அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் சேலம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

புறக்கணித்த இபிஎஸ் - ஓபிஎஸ்; டெல்லிக்கு ஓடிப் போன ஐபிஎஸ் - காயத்ரி ரகுராம் தாக்கு 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

gayathri raghuram  talk about annamalai erode byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

 

அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தனது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி அணி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் அந்தத் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். 

 

இதனிடையே, சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது. பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார் ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது. 2024 தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25 இடங்களில் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிப் போன ஐ.பி.எஸ். இப்பவே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணிக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.