Advertisment

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா? – விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

cMadras High Court

Advertisment

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளனவா என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர் நலச்சங்கம் அமைப்பின்சார்பில் கே.ஆர்.செல்வராஜ் குமார் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடாமல், அது குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு, கர்நாடகா உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

Advertisment

கர்நாடகா உயர் நீதிமன்றம் தடையை நீக்கக் கூடும் என்பதால், வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வரைவு அறிக்கையின் மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கர்நாடகா உயர்நீதிமன்றம் தடையை நீக்கினால், நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையத்தளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர் மனுதாரராக, தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

environment MADRAS HIGH COURT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe