Skip to main content

முதலமைச்சரிடம் கோரிக்கைகளை வைத்த தொழில் முனைவோர்கள்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

Entrepreneurs who made demands to the Chief Minister!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கரூரில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்பின் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.

 

இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் சென்றார். இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சரை ஜவுளித் தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. 


அங்கு முதலமைச்சரைச் சந்தித்த பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின் முதல்வர், தொழில் முனைவோர்களுடன் தொழில்துறை வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நடத்தினார். 

 

இந்த கலந்துரையாடலின் போது, ‘200 ஏக்கர் பரப்பில் சிப்காட் அமைக்கப்படுவது விரிவாக்கம் செய்யப்பட்டு குறைந்தது 500 ஏக்கர் அளவில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும். கரூரில் இருந்து அருகிலுள்ள திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையங்களை அடைய சிறந்த சாலைகள் இல்லை. இதனால் அதிக அளவில்  நேர விரயமாவதும், விபத்து ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகிறது. எனவே இந்த வழிச்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, ஆறு அல்லது எட்டு வழி சாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

 

வர்த்தக வழிகாட்டு மையம் கரூர் நகரில் அமைக்க திட்டவரைவு கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கண்காட்சி அரங்கம் மாநாட்டு அரங்கம் தொழில் முனைவோருக்கான வர்த்தகம் மற்றும் சந்தை படுத்துதல் பயிற்சி, சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டறிய வழிகாட்டுதல் மையம், ஜவுளி ஆராய்ச்சி மற்றும் புதிய பொருட்களை உருவாக்கும் மையம், கரூர் ஜவுளி தொழில் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக விரைவில் உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் வைக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணன், இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் தலைவர் வெங்கடேசன், கரூர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி வளர்ச்சி சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், சிட்கோ தலைவர் பாஸ்கர், கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராம்பிரகாஷ், அசோசியேஷன் ஆப் ஆட்டோபொபைல் கோச் பில்டர் கரூர் தலைவர் முருகானந்தம், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகத்தின் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்