
கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, சேலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும், நடப்புக் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வையும் ஒத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் கூட்டம் கூடுவதை அடியோடு தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சேலம் 4 சாலையில் உள்ள அரசு நிதியுதவியுடன் இயங்கி வரும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 சேர்க்கைக்கு திங்கள் கிழமை (ஏப். 26) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு, இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களுக்கு பிளஸ்1ல் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஏப்.26ல் நடத்தப்படும் என எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து திங்களன்று காலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் பள்ளியில் குவிந்தனர். நுழைவுத்தேர்வு எழுதுவதற்காமாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாளும் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்ற நிலையாணையையும் சிறுமலர் பள்ளி நிர்வாகம் மீறியுள்ளது.
நுழைவுத்தேர்வு துவங்கிய சிறிது நேரத்தில், இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்திக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் உடனடியாக சிறுமலர் மேலநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை அலைபேசியில் அழைத்து கடுமையாக எச்சரித்தார். பின்னர், பள்ளி நிர்வாகம் நுழைவுத்தேர்வை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும், மாணவர்கள், பெற்றோர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
ஒரே நேரத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி முன்பு திரண்டதால் 4 சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.