Enforcement officer Ankit Tiwari jailed again

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

Advertisment

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு நீதிபதி மேனகாமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து அங்கித் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வழக்கறிஞர்செல்வம் என்பவர் ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,இந்தவழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Advertisment

இதற்கு அங்கித் திவாரியின் வழக்கறிஞர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் 14 ஆம் தேதி (இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல்நீதிமன்ற நீதிபதி மேனகா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி மேனகா உத்தரவிட்டுள்ளார்.