Enforcement Directorate summons TASMAC directors

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சார்பில் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டாஸ்மாக் விவகாரத்தில் மேற்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த நடத்தத் தடை விதிக்க வேண்டும். அமலாக்கத்துறை சோதனையைச் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கில் இருந்து திடீரென விலகினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்து வந்தது.

Advertisment

இரு வழக்குகளிலும், இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள்நேற்று (23.04.2025) வழங்கியதீர்ப்பில், “காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனையை நடத்துவதாக அரசு சார்பில் கூறுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு முன் உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்தே குற்றம் நடந்துள்ளதா? என விசாரிக்க முடியும்.

எனவே அமலாக்கத்துறையின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பதை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது. அதே சமயம் சோதனையின்போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

இந்நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்துடாஸ்மாக் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிர்வாக இயக்குநர் விசாகன், சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனசம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.