Enforcement Directorate raids Minister Duraimurugan house

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை 8 மணியளவில் 10க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் காட்பாடி அடுத்த அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளராக உள்ள மாநகர உறுப்பினர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூபாய் 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது வாக்காளர்களுக்கு தருவதற்காக வைத்திருந்த பணம் என முடிவு செய்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதன்பின் அந்த தொகுதிக்கு மட்டும் தனியாக நடைபெற்ற தேர்தலிலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அந்த வழக்கு இப்போதும் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கு தொடர்பாகவே இந்த ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.