
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே, தொடர்ந்துபோதையில்துன்புறுத்தி வந்த கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகில் உள்ள வி.சி.மேட்டூர் பகுதியைச்சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி பானுமதியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவி பானுமதி சின்னதகரகுப்பம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்குச் சென்று தஞ்சம் அடைந்துவிட்டார். ஆனால் விடாத கணவர் மது அருந்திவிட்டு அங்கும் சென்று தொடர்ச்சியாக தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு பானுமதியின் தாய் வீட்டிற்கு வந்த தேவராஜ், பானுமதியை கற்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பானுமதி அருகிலிருந்த கட்டையை எடுத்து தேவராஜ் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த தேவராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த வாலாஜாபேட்டை போலீசார் தேவராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேலும் பானுமதியை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us