
மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் குமார் ஆவார். இவரது வீட்டிற்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவரின் இடத்தில் ‘வசந்தமுத்து மாரியம்மன்’ என்ற பெயரில் கோயில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வீட்டிற்குச் செல்வதற்கான பாதை இல்லை எனக் கூறி பலமுறை மதுரை மாநகராட்சியிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சதீஸ் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில் தான் கோயில் திருவிழாவானது கடந்த 23ஆம் தேதி (23.05.2025 - வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது சதீஷ்குமார் இல்லத்திற்குச் செல்லக்கூடிய 5 அடி அகலப் பாதையை முழுவதுமாக தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகிகளாக உள்ள காசி மற்றும் அவரது உறவினர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கும்பலாகத் திருவிழா நடைபெற்றபோது சதீஷ்குமாரின் வீட்டு முன்பாக நின்று அவரை அவதூறாகப் பேசியுள்ளனர். அதோடு கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சதீஷ் குமார் காவல் துறைக்கு இது குறித்து புகார் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய கோவில் நிர்வாகிகளான காசி அவரது உறவினர்களான ஸ்ரீராம், ஜெய்கணேஷ், பாலா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அகற்றப்பட்ட ஆத்திரத்தில் மனுதாரரை மனைவி மற்றும் பிள்ளைகள் முன்பாக கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.