Tree 1

சென்னை சிறு துளி அமைப்பின் சார்பில் பள்ளிக்கு பத்து மரங்கள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் விழா அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

வட்டார வளமைய பயிற்றுநர் கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் மரக்கன்றினை நட்டு வைத்து சென்னை சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த நாகராஜன் பேசியதாவது, மரக்கன்றினை வளர்ப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு தான். ஒவ்வொரு வருடமும் பல இலட்சம் மரக்கன்றுகளை தலைவர்களின் பிறந்த நாளிலும் மற்ற நிகழ்வுகளிலும் நடுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அதன் பின்பு அந்த மரக்கன்றுகள் அனைத்தும் எந்த அளவுக்கு வளர்ந்து இயற்கை சமநிலையை உருவாக்குகின்றன என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் நமக்கு கிடைப்பதில்லை.

Advertisment

ஒரு சில இடங்களில் ஒரே இடங்களில் மரங்கள் நடுவதாக காண்பிக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக சென்னை சிறு துளி அமைப்பு வளர்ந்த மரங்களை பராமரிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் மரம் வளர்ப்பில் தங்களை முழு ஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள முதல் முயற்சியை கையில் எடுத்து உள்ளோம்.

பள்ளியில் மரக்கன்றுகள் கொடுப்பதன் மூலம் மரக்கன்றுகள் நடல் பற்றியும் மரம் வளர்ப்பைப் பற்றியும் அதனால் ஏற்படும் சூழலியல் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். விதைகளும் குழந்தைகளும் பசுமைத் தாயின் பெருநம்பிக்கை என்றும் இன்னும் பிறவா தலைமுறைக்கு பல மகிழ்வித்து மகிழ் திட்டங்களை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மூலம் செயல்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றார்.

Advertisment

மேலும் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் ஒவ்வொரு வருடமும் பத்து மரக்கன்றுகள் முழுமையாக வளர்க்கும் விதமாக மாதத்திற்கு நூறு ரூபாய் வீதம் 1200 ரூபாய் ஒரு பள்ளிக்கு வழங்க தீர்மானித்து இந்த தொடக்க விழாவை உருவம்பட்டி பள்ளியில் மகிழ்வாக தொடங்கியுள்ளோம்.

Tree 2

இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 50 அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுக்க உள்ளோம். பிறந்த நாள்களில் பல வகைகளில் செலவு செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை மரம் வளர்க்கும் பசுமைப் பணிக்கு வழங்கினால் எங்கும் பசுமை எதிலும் பசுமை என்ற உன்னத நிலையை ஏற்படுத்த முடியும் என்ற உன்னத நோக்கத்தோடு சென்னை சிறு துளி அமைப்பை நடத்தி வரும் ஜெயாவெங்கட் என்பவர் தனது மகள் தமிழ்யாழினியின் பிறந்த நாளில் இத்திட்டத்தை இப்பள்ளியில் தொடங்கியுள்ளார் என்றார்.

முன்னதாக வாழ்த்து அட்டைப் போட்டியில் வெற்றி பெற்ற பாலாமணி, ஜோத்ஸனா, பிரியா ஆகியோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் சென்னை சிறு அமைப்பின் சார்பில் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். முடிவில் மாணவர்கள் அனைவரும் மரங்களை நடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவற்றை முறையாக பராமரித்து வளர்ப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.