Skip to main content

'' ஊக்கமும், பயிற்சியும் கொடுத்தால் இவர்களும் ஒலிம்பிக்கில் சாதிப்பார்கள்..''- இளம் வீரர்களின் தொடர் சாதனை!

 

"With encouragement and training, they too will succeed in the Olympics"

 

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த மாதம் நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,  ''ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான சத்தான உணவும், பயிற்சியும் அளிக்கப்படும். அதிலும் 6 வயதிலேயே விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தால் சாதிக்கலாம்'' என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே இளம் வீரர்கள் தொடர்ந்து சாதித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 10 வயதிற்கு கீழ் உள்ள இளம் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நோபல், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் போன்ற சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்து வருகிறார்கள். செப்டம்பர் 4 ந் தேதி பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்-சங்கீதா தம்பிகளின் 7 வயது மகன் நலன்ராஜன். பட்டுக்கோட்டை சாய்நிகில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மனோரா ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டு தினம் மற்றும் கரோனா விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சியில் நலன்ராஜன் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று அணைக்காடு பைபாஸில் தொடங்கி பட்டுக்கோட்டை-தஞ்சை பைபாஸ் வரை சுமார் 18.4 கி மீ தூரத்தை ஒரு மணி நேரத்தில் அடைந்து 'ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்' மற்றும் 'புக் ஆஃப் இந்தியா ரெக்கார்ட்' சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார். நிகழ்ச்சியை சார் ஆட்சியர் பாலச்சந்தர் தொடங்கி வைத்தார். ரெக்கார்ட்ஸ் அமைப்பு விவேக் நாயர் சிறுவனின் சாதனையை நேரில் பார்த்து பதிவு செய்து பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கினார். பயிற்சியாளர் ஸ்ரீநாத் நன்றி கூறினார்.

 

"With encouragement and training, they too will succeed in the Olympics"

 

இதேபோல கடந்த மாதம் 75 வது சுதந்திர தினத்தில் பட்டுக்கோட்டை கருப்பசாமி-ரூபினியின் 3 வயது மகள் தீபாஸ்ரீ பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சமூக சேவகர் மகேந்திரன் கொடியசைக்க, 1.18 மணி நேரத்தில் 9.8 கி.மீ க்கு தொடர்ந்து ஓடி நோபல் சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை நோபல் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்த், ஜெயபிரதாப், வினோத் ஆகியோர் கண்காணித்து பதிவு செய்தனர். சிறுமியின் சாதனையை ஓட்டத்தை பொதுமக்கள் உற்சாகத்தோடு கைதட்டி ஊக்கப்படுத்தினார்கள். முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர் பாபு மற்றும் மாவட்ட கவுன்சிலர் விஜயலட்சுமி சாம்பசிவம் முன்னிலையில் நோபல் நடுவர்கள் பாராட்டி சாதனை சான்றிதழ் வழங்கினார்கள்.

 

அதே போல கடந்த மார்ச் மாதம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் நோபல் உலக சாதனைக்கான நிகழ்ச்சி தமிழ்நாடு பளுதூக்கும் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து- மாலா தம்பதியரின் மகள் வர்ஷிகா என்ற 9 வயது சிறுமி கலந்துகொண்டு "காசுக்கு ஓட்டுப் போடாதீங்க.. உங்கள் உரிமையை விற்காதீங்க" என்பதை வலியுறுத்தி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அதிராம்பட்டினம் சாலையில் 11 கி.மீ. தூரம் ஓடி மீண்டும் பட்டுக்கோட்டைக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் 23 கி.மீ. தூரத்தைக் கடந்துவந்து நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.

 

இதே நிகழ்ச்சியில் புனல்வாசல் சிவானி, ஆண்டிகாடு ஹரினி ஆகிய இரு சிறுமிகளும் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தனர். இப்படி பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள திறமையான இளம் விளையாட்டு வீரர்களை இனம்கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சாதிக்க தூண்டும் பயிற்சியாளர்களையும் பெற்றோர்களையும் பாராட்டுவோம். தொடர்ந்து இதுபோன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் சொன்னது போல போதிய ஊக்கமும், பயிற்சியும் சத்தான உணவும் கொடுத்தால் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் சாதித்து இன்று பட்டுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் இந்த இளம் வீரர்கள் நாளை இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.