
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வி. கணேசன், பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அதில் கலந்து கொண்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திட்டக்குடி நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர். பல்வேறு கம்பெனிகளின் அதிகாரிகள் வருகை தந்தனர். வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சி.வி,கணேசன் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.