Employment camp attended by 2700 people; Minister Meiyanathan who issued the work orders

Advertisment

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தத்திட்டமிட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஏற்பாட்டில் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா மற்றும் புதுக்கோட்டை வருவாய்க்கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது.

வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 2700 பேர் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பல்வேறு வேலைக்கான விண்ணப்பங்கள் கொடுத்தனர். முகாமில் கலந்து கொண்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குத்தேவையான இளைஞர்களைநேர்காணல் செய்து தேர்வு செய்தனர். இதில் 303 இளைஞர்களுக்கு வேலைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கானப் பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்.எம். அப்துல்லா எம்.பி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கினார்கள்.

Advertisment

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''நான் கல்லூரி படிப்பு முடிக்கும் போது எனக்கு வேலைக்குச் செல்ல இதுபோல யாரும் வழிகாட்ட ஆள் இல்லை. ஆனால் விடாமுயற்சியாக தனியாக ஒரு சான்றிதழ் படிப்பு முடித்து சிங்கப்பூர் சென்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன். ஆனால் படித்த இளைஞர்களான உங்களுக்கு வழிகாட்ட இந்த அரசு உள்ளது. அதனால் தான் இத்தனை தனியார் நிறுவனங்களும் இங்கு வந்து வேலைக்கான நேர்காணல் செய்கின்றனர். இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலைக்கான முயற்சிகளை செய்ய வேண்டும்'' என்றார்.

இந்த தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புமுகாமில் வேலைக்குத் தேர்வானஇளைஞர்கள் நவம்பர் முதல் வாரத்தில் பணிக்குச் செல்கின்றனர்.