/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2852.jpg)
சேலத்தில் நீதித்துறை நடுவர் ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் வைத்து பட்டப்பகலில், அலுவலக ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் 4வது நீதித்துறை நடுவராக (மாஜிஸ்ட்ரேட்) பணியாற்றி வருபவர் பொன் பாண்டி. மார்ச் 1ம் தேதி காலையில் வழக்கம்போல் நீதிமன்றத்திற்குச் சென்று, தனது அறையில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அப்போது, அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37) உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் நீதித்துறை நடுவர் தலைதெறிக்க அலறியபடி வெளியே ஓடி வந்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என்ன நடந்து என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_236.jpg)
நடுவர் பொன் பாண்டியோ, போலீஸ்... போலீஸ்.... என கூக்குரலிட்டார். அப்போது அந்த இடத்தில் ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே இருந்தார். அவரிடம் தன்னை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக கதறியபடி கூறினார். உடனடியாக அந்த பெண் காவலர், அங்கே இருந்த பிரகாஷை மடக்கிப் பிடித்தார். அங்கிருந்த மற்ற ஊழியர்களும் பெண் காவலருக்கு துணையாக பிரகாஷை சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, பிரகாஷை அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. கத்திக்குத்தில் காயம் அடைந்த நீதித்துறை நடுவர் பொன் பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடைய நெஞ்சு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, சக நீதிபதிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே கத்தியால் குத்திய பிரகாஷை அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர், சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் என்பதும், ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் சமீபத்தில்தான் சேலம் நீதிமன்றத்திற்கு மாறுதலில் வந்தார் என்பதும் தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_798.jpg)
கடந்த 2015ல் சங்ககிரி நீதிமன்றத்தில் காவலர் (வாட்ச்மேன்) பணியில் சேர்ந்துள்ளார். அங்கு அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்று, 2019ல் மேட்டூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் ஓமலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் ஓமலூரில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு மாறுதலாகி வந்துள்ளார். மேலும், சம்பவத்தன்று காலை 10.15 மணியளவில்தான் பிரகாஷ் பணியில் சேர்ந்துள்ளார். நீதித்துறை நடுவர் பொன் பாண்டியைச் சந்தித்து, தான் பணியில் சேர்ந்து விட்ட தகவலைக் கூறியிருக்கிறார். மேலும், என்னை எதற்காக ஓமலூரில் இருந்து இடமாறுதல் செய்தீர்கள் என்றும் கேட்டிருக்கிறார்.
அதற்கு பொன் பாண்டி, நான் எதற்காக உங்களை இடமாறுதல் செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் தலைமை நீதித்துறை நடுவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை நம்ப மறுத்த பிரகாஷ், என்னுடைய இடமாற்றத்துக்கு நீங்கள்தான் காரணம் என்று கூறியபடியே, கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். அப்போது பொன் பாண்டி தடுத்ததால் நெஞ்சில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் அவரும் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்துட்டார்.
பிரகாஷ் மீது கொலை முயற்சி, கொடுங்காயம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, தலைமை நீதித்துறை நடுவர் பபிதா உத்தரவிட்டுள்ளார்.
Follow Us