Emanuel Sekaran Memorial incident

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67வது நினைவு தினம் இன்று (11.09.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அவரது கட்சியினர் இன்று மாலை இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்துள்ளனர்.

Advertisment

அப்போது இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் கிருஷ்ணசாமியின் மகன் உடன் நினைவிடத்திற்கு வந்தவர்களை அங்கிருந்து கீழே இறங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் புதிய தமிழகம் கட்சி - தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் இடையே சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருதரப்பினரிடையே கை கலப்பு ஏற்பட்டது.

Advertisment

இதனால் இரு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதே சமயம் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைத்தனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.