An elephant trapped in an electric fence has died tragically ..!

Advertisment

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி என்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில், காளையா என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துவருகிறார்.

இவருடைய விவசாய நிலம், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், விவசாயத்தோட்டத்துக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் யானை, காட்டுப்பன்றி ஆகிய வன விலங்குகளிடம் இருந்துதான் பயிரிட்ட பயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள, காளையா தனது விவசாய நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

18ஆம் தேதி இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, அவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி துடிதுடித்துப் பரிதாபமாக இறந்துவிட்டது. இந்தத் தகவல் அறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர், அந்தச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் உயரழுத்த மின்சாரத்தை சட்டவிரோதமாக, கம்பி வேலிக்குப் பாய்ச்சியதின் காரணமாகத்தான், யானை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

Advertisment

இறந்த யானைக்கு 8 வயது இருக்கும் எனவும் இந்தச் சம்பவம் குறித்து விவசாயி காளையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

வனப்பகுதியில் பயிர்களைக் காப்பாற்ற அமைக்கப்படும் மின் வேலிகளில், குறைந்தளவு மின்சாரமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலர் அதிக மின்சாரம் பாய்ச்சுவதால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுபோன்ற விபத்துகள்சுற்றுச்சூழல், வன ஆர்வலர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.