
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், ஈரோடு வருகை தந்தாலோ அல்லது ஈரோட்டை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ‘ஈரோடு எனது குருகுலம்’ என பெருமை பொங்க கூறுவார். பகுத்தறிவுச் சுடரொளி தந்தை பெரியாரின் கொள்கை, அறிவுக்கரங்களை பிடித்து ஈரோட்டில் வாழ்ந்ததை தான் கலைஞர் அப்படி கூறி வந்தார். தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஈரோடு; திராவிட இயக்கத்திற்கும், எங்கள் அனைவருக்கும் தாய் வீடு" என புகழுடன் கூறியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் திறப்புவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை இன்று நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஈரோட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ. 355 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிறகு இவ்விழாவில் காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தற்போது கரோனோ பரவல் காலம் என்பதால் ஈரோட்டுக்கு நான் நேரில் வராமல் காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறேன். வைரஸ் தொற்று பரவல் குறைந்த பிறகு எங்களுக்கெல்லாம், திராவிட இயக்கத்தின் தாய் வீடான ஈரோட்டுக்கு நேரில் வந்து மக்களை சந்திப்பேன். ஏனென்றால் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த மண்... தலைவர் கலைஞரின் குருகுலம் ஈரோடு.
மக்கள் நேரிடையாக பயன்பெறும் வகையில் பல திட்டப் பணிகளை இன்று துவக்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பெருந்துறையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் 1311 படுக்கை மற்றும் கரோனா சிகிச்சைக்காக தனியாக 420 படுக்கை வசதிகளை ஏற்படுத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு நன்றி.
அதே போல், ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சக்தி சாலையில் உள்ள சி.என்.சி. காலேஜ் எனப்படும் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய OBC பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளது. இதற்காக திமுகழகம் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்ற நொடியிலிருந்து தொடர்ந்து மக்கள் பணி செய்து வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு என்னை பாராட்டினார். ஆமாம் அப்படித்தான் தலைவர் கலைஞர், எங்களையெல்லாம் பழக்கி வைத்துள்ளார். தலைவர் கலைஞரை, தந்தை பெரியார் எப்படி பழக்கி வைத்திருந்தார் என்று எங்களிடம் அவர் அடிக்கடி கூறுவது; ‘யானை தனது குட்டியை எப்படி பழக்குமோ அப்படித்தான் மக்களிடம் கொள்கைகளை எடுத்துரைக்க, மக்கள் தொண்டாற்ற தந்தை பெரியார் என்னை பழக்கினார்’ என்பார். அதுபோல் யானையாக; குட்டிகளான எங்களை மக்கள், சமூக, இயக்க பணியாற்ற கலைஞர் பழக்கி வைத்துள்ளார்" என பேசினார்.