elephant incident forest officers in dharmapuri

Advertisment

பென்னாகரம் அருகே, மக்னா யானையை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தர்மபுரி வனக்கோட்டம் பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காடு ஆஞ்சநேயர் கோயில் ஓடை அருகே மக்னா யானை ஒன்று, ஜூலை 1- ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு, நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினார். ஓசூர் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், யானையின் சடலத்தைக் கூராய்வு செய்தார். அப்போது, யானையின் நெற்றி பகுதியில் ஈயக்குண்டு ஒன்று பாய்ந்திருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் யானையை சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வநத்து.

Advertisment

இதுகுறித்து வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பென்னாகரம் மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சின்னப்பநல்லூர் சண்முகம் (வயது 37), கொட்டத்தண்டுகாடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 42) சின்னப்பநல்லூரைச் சேர்ந்த கமலேசன் (வயது 44), சிட்டான்கொட்டாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 27) ஆகியோர்தான் யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வந்தது.

பிடிபட்ட நான்கு பேரும் வனப்பகுதியில் தடையை மீறி அடிக்கடி பன்றி, மான்களை வேட்டையாடி வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர்கள் மான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மக்னா யானை துரத்தியுள்ளது.

அதனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நாட்டுப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisment

விசாரணைக்குப் பிறகு அவர்கள் நான்கு பேரையும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, பிடிபட்ட கும்பல் அடிக்கடி வனப்பகுதிக்குள் புகுந்து உயிரினங்களை வேட்டையாடி வந்துள்ளனர். வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் அவர்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனக்கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படியும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.