Elephant hunting at rabbit hunt ... Two arrested!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் ஆண்யானை வேட்டையாடப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது ஆண் யானையைச் சுட்டுக் கொன்ற இருவரை வனத்துறைபோலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகிலுள்ள அஞ்செட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர் யானை இறந்து கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து யானையின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

உயிரிழந்து கிடந்த யானையின் தந்தம் நீக்கப்பட்டிருந்தது. எனவே தந்தத்திற்காக யானை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேசமயம் ஆண் யானையின் உடற்கூறாய்வுஅறிக்கைக்கு வனத்துறையினர் காத்திருந்த நிலையில், யானையின் உடலில் குண்டுகள் பாய்ந்து இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

Advertisment

இதனால் ஆண் யானை வேட்டையாடப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் விசாரணையை வனத்துறையினர் தீவிரப்படுத்தி இருந்தனர். இந்தநிலையில் அஞ்செட்டி அருகே உள்ள ஏழுமலை முத்தன பள்ளியைச் சேர்ந்த முத்து, ஏழுமலையான் தொட்டியை சேர்ந்த காளியப்பன் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் முயல் வேட்டையாட வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது ஒற்றை காட்டு யானை தங்களை விரட்டியதாகவும் அதனால் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த வனத்துறையினர் யானையைக் கொல்ல பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததோடு அவர்களிடமிருந்து வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சதீஷ் மற்றொரு நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து யானை தந்தமும் கைப்பற்றப்பட்டுள்ளது.