Skip to main content

ஓட ஓட துரத்தி தாக்கிய ஒற்றை யானை... படுகாயம் அடைந்த நபர்..! 

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Elephant coimbatore one person injured
                                                   மாதிரி படம்


கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் நடந்து வருகிறது. 

 

நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் வந்த ஒன்றை காட்டு யானை, அதே பகுதியைச் சேர்ந்த நந்தீஸ்வரன் என்பவரை தாக்க முற்படும்போது, அந்நபர் அதனிடம் தப்பிக்க ஓடியுள்ளார். அப்போதும் அந்த யானை அவரை துரத்தி துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. 

 

இதில் அவரது முதுகு பகுதியில் தோல்பட்டை கிழிந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் காட்டு யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்குவந்த வனத்துறையினர், ஒன்றை காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர். 

 

 

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த நந்தீஸ்வரனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதுகில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டபோதும் எந்த வித அச்சமும் இன்றி சாதரணமாக சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏறி அமர்ந்து பேசியவாரே சிகிச்சை எடுத்தக்கொண்ட நந்தீஸ்வரனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி எம்.பி. உடல்நிலை குறித்து வைகோ விளக்கம்!

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
Ganesh Murthy M.P. Vaiko explanation about health

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளராக பணியாற்றி வருகிறார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழலில் இன்று (24.03.2024) காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றார். என்ன காரணம் என தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை விழுங்கிய அவர் 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கணேச மூர்த்தி நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேச மூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம் என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.

Ganesh Murthy M.P. Vaiko explanation about health

இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அது மாதிரியே செய்யலாம் என சொன்னேன். அதன் பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என இருந்தேன். 

அதன் பிறகும் அவர் நன்றாக பிரியமாகவே பேசினார். வீட்டில் மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நேற்று நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முதலுதவி சிசிக்சைகள் அனைத்தும் செய்து விட்டனர்.

அதன்பிறகு, ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் கொஞ்சம் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆதனால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; தீடீரென வேட்பாளராக மாறிய முன்னாள் ராணுவ வீரர்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ex-serviceman who has filed his nomination to contest the parliamentary elections

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் கடந்த 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் ஈடுபட்டு வந்த இவர், சொந்த ஊருக்கு வந்ததும் குடும்பத்தினரோடு அமைதியாக வசித்து வந்துள்ளார். மேலும், நடப்பு அரசியலை கூர்மையாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் தேர்தலில் களம் காண்பவர்கள் அவரிடம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மதுரை விநாயகம், ராணுவ சீருடையை அணிந்துகொண்டு, தனது குடும்பத்தாரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகக் கூறியுள்ளார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் கொடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வேட்பு மனு கொடுக்க வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும், தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் சம்பாதிப்பதற்காக இந்தத் தேர்தலில் பேட்டியிடவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், இதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், இங்கு ஏற்கெனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கும் போது நீங்கள் வந்து என்ன செய்ய போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுரை விநாயகம், இங்கு உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் சம்பளத்தையும் மூன்று ஓய்வூதியத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள் எனவும், இதனால் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய மதுரை விநாயகம், நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வேன் எனவும், நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் போட்டியிட போவதாக கூறி சவப்பெட்டியோடு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறுபடியும் அதே பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.