அசராத அரிசிக் கொம்பன்; அச்சத்தில் மாஞ்சோலை மக்கள்!

elephant arisi komban action fear manjolai people  

தேனி மாவட்டம் கம்பம் மேகமலைப் பகுதி மக்களை பீதியிலும் அச்சத்திலும் உறைய வைத்துக் கொண்டிருந்த கேரளாவின் மூணாறு பகுதியின் அரிசிக் கொம்பன் யானையை கடந்த 06 ஆம் தேதி அன்று மூன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறையினர். வழியோரப் பகுதிகளில் அரிசிக் கொம்பனின் ஆக்ரோஷத்தைத் தணிக்க மேலும் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி45 கி.மீ தொலைவு மலை மீதுள்ள மாஞ்சோலைப் பகுதிக்குள் கொண்டு வந்தனர்.

மயக்க ஊசிகளின் தாக்கத்தினால்நான்கு நாட்களாக இரையெடுக்காமலும், இரண்டு நாட்கள் தண்ணீர் குடிக்காமலும் மிகவும் பலவீனப்பட்டுப் போயிருந்த அரிசிக் கொம்பனை 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவில் மலையின் காக்காச்சி பகுதியில் தங்கிக் கழித்த பின் மறு நாள் காலை அங்கிருந்து (அப்பர்) கோதையாறு பகுதிக்குள் கொண்டு வந்தவர்கள். அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள செங்குத்தான முத்துக்குழி அடர் வனப்பகுதியில் விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அரிசிக் கொம்பனின் கழுத்தில் ரேடியோ காலர் கருவியும் பொருத்தப்பட்டது. அரைகுறை மயக்கத்தில் விடப்பட்ட அரிசிக் கொம்பனின் உடல் நலம் சீராக இல்லாததால், அன்றைய தினம் வனத்திற்கு வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர்களின் குழு அரிசிக் கொம்பனுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் தெம்பான அரிசிக் கொம்பன் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிய போது வனத்துறையினரால் அதன் பக்கம் நெருங்க முடியவில்லையாம். எனினும் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அடங்கிய குழுவினர் அரிசிக் கொம்பனைக் கண்காணித்தபடி இருந்தனர்.

காடு மேடு, நகரங்களில் அன்றாடம் 40 கி.மீ தொலைவிற்கும் மேலாக நடந்து சுற்றித்திரிந்து பழக்கப்பட்ட அரிசிக் கொம்பன் மறுநாள் காலையில் சிலிர்த்துக் கொண்டு வனப்பகுதியை கடக்க முற்பட்டதில் அடுத்த பகுதியான குமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அணைக்காடுகளுக்குள் புகுந்திருக்கிறது. மேலும் அரிசிக் கொம்பனின் ரேடியோ காலரின் சிக்னலும் துண்டிக்கப்பட்டு தொடர்பு எல்லையைத் தாண்டியிருக்கிறது. இதனால் பதற்றத்திற்குள்ளான வனத்துறையினர் அரிசிக் கொம்பனைத் தேட இரண்டு நாட்களுக்குப் பிறகே சிக்னல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அங்கிருந்து சின்ன குற்றியாறு அணைப் பகுதி வழியாக குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற அரிசிக் கொம்பனை வனத்துறையினர் வெடி வெடிக்கச் செய்து விரட்ட அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் மீண்டும் அதன் சிக்னல் கிடைக்காமல் போயிருக்கிறது.

இதனால் கலவரப்பட்டுப் போன வனத்துறை 50க்கும் மேற்பட்ட வனவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து பகுதிகளின் தேயிலைத் தோட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் குடியிருக்கும் இரண்டாயிரம் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பிற்குள் அரிசிக் கொம்பன் புகுந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் அப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் கோதையாறு அருகிலுள்ள குற்றியாறு செல்கிற சாலைப் பக்கம் யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. மேலும் அந்தப் பகுதியின் 100 மீட்டர் சுற்றளவில் அரிசிக் கொம்பன் குடியிருப்புப் பகுதியைத் தேடிச் சுற்றி வருவதால், குமரி மாவட்டத்தின் கீழ் கோதையாறில் உள்ள வனப்பகுதி மின் நிலையங்களுக்கு குற்றியாறு அணையின் தண்ணீர் பம்ப்பிங் செய்யப்படுவதால் அந்தப் பணியில் இருக்கும் சுமார் 25க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் அரிசிக் கொம்பன் நடமாட்டம் குறித்து அச்சத்தில் பணிக்குச் செல்லத்தயங்குகிறார்களாம்.

தவிர, இதனை விடுத்து அரிசிக் கொம்பன் அருகிலுள்ள காக்காச்சி, மாஞ்சோலை, குதிரைவெட்டி பகுதிகளின் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பிற்குள் எந்நேரமும் புகுந்து விடலாம் என்பதால் ஒட்டு மொத்த தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களும் பீதியில் உறைந்து போயுள்ளனவாம். அதேசமயம், தங்களது தொழிலாளர்களைக் காப்பாற்றவும் தேயிலைத் தொழில் அச்சமின்றி நடைபெறவும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட குதிரைவெட்டியிலிருக்கும் பி.பி.டி.சி.யின் தலைமையகம் அரிசிக் கொம்பனின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணித்து வருகிறதாம்.

elephant arisi komban action fear manjolai people  

அரிசிக் கொம்பன் பெயர் சொன்னாலே பதறுவது ஏன் என்பதை அறியும் பொருட்டு அது ஐந்து வருடங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கேரளாவின் மூணாறு பகுதியில் விசாரித்ததில், மூணாறின் சமூகச் செயற்பாட்டாளரான முல்லை முருகன் சொல்லுவதோ, "1998களில் அரிசிக் கொம்பன் குட்டியாக இருந்தபோது அதன் தாய் மரணமடைந்திருக்கிறார். அப்போதே ஏக்கத்தால் முட்டியழுதிருக்கிறார். அதன் பின் உறவுக் கூட்டத்தார்களுடன் காடுகளில் வாழ்ந்த அரிசிக் கொம்பன் வாலிப முறுக்கில் மூணாறு பகுதியின் சின்னக்கானல் பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியகானல், பல்லியாறு, சூரியநல்லி 301 காலனி போன்ற எஸ்டேட் பகுதிக்குள் இறங்கியவர் அங்குள்ள ரேஷன் கடைகளை உடைத்து அரிசியைத் தின்றிருக்கிறார். பல நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து அரிசியையே உணவாகச் சாப்பிட்டிருக்கிறார். சில நேரங்களில் மூணாறு, இடுக்கி நகரங்களிலும் புகுந்து சென்று பழகியிருக்கிறார். தவிர கொரோனா காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்ட போது அவர் அரிசியையே பிரதான உணவாக சாப்பிட்டவர். காடுகளிலுள்ள இலை தழைகளை பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. இதுல விசேஷம் என்னான்னா, மற்ற மாநிலங்களில் மக்களுக்கு தரப்படுகிற ரேஷன் அரிசியைக் காட்டிலும் கேரள அரசு தருகிற ரேஷன் அரிசி ரொம்பவும் சத்தானது.

ஏழை எளிய தொழிலாளர்களின் பிரதான உணவு ரேஷன் அரிசி. அதை உண்கிற அவர்களின் உடல் நிலை தெம்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கேரள அரசு ரேஷன் அரிசியில் சத்தான புரோட்டீன்களைச் சேர்த்திருக்கிறது. அதாவது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்னென்ன சத்துணவு தேவையோ அத்தனை வகைகளும் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசியில் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட அரிசி வகையை உண்டு ருசி கண்டவர் அரிசிக் கொம்பன். அதைத் தவிர வேறு எதையும் நாடமாட்டார். எனவே அதைத் தேடி குடியிருப்புகளுக்குள் நுழைவதே அவரது வாடிக்கை. அரிசியையே நாடுவதால் தான் அவரை அரிசிக் கொம்பன் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். சாதுவாக இருந்தால் சாந்தமாக இருப்பவர் எதிர்த்து விட்டால் மூர்க்கமாகி விடுவார் அரிசிக் கொம்பன்" என்கிறார். அரிசிக் கொம்பன், ஒட்டுமொத்த மலையகத் தொழிலாள மக்களின் உறக்கத்தைப் பறித்திருக்கிறது.

arisikomban elephant kanniyakumari Theni thirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe