publive-image

Advertisment

கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் COVID 19 தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07/12/2021- க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26/11/2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையைத் தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisment

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தும்படிமதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த விரிவான அறிக்கையினை 07/12/2021 அன்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், "பெரும்பாலான ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்பதால் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளது.