மின்வாரிய அலட்சியத்தால் பலியாகும் உயிர்கள்...

electricity negligence ...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆயிங்குடி,பட்டிணக்காடு கிராமத்தில் கடந்த வாரம் ஒரு துக்க நிகழ்வுக்கு சடலம் ஏற்றும் வாகனம் வந்து திரும்பும் போது தாழ்வாகச் சென்ற மின்கம்பிகள் சொர்க்கரதம் வாகனத்தின் மேல் உரசியதால் வாகனத்தை ஓட்டிய தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த சக்தி என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே திருவரங்குளம் ஒன்றியம் சேந்தாக்குடி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் ஆபத்தான நிலையிலும் செல்வதாக அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதன் பலன் நேற்று முன்தினம் காலை மின்கம்பி அறுந்து விழுந்து வீடு ஓரத்தில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் மீது விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. எல்லாம் சில நாட்களுக்குள் நடந்த சம்பவங்கள். இதேபோல பல சம்பவங்கள் நடந்துள்ளது.

அறந்தாங்கி எழில் நகரில் 140 வீடுகளுக்கு மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளால் மின்சாரம் தாக்கி கடந்த சில வருடங்களில் 6 பேர் உயிரிழந்தும் கூட மின்பாதையை மாற்ற மின்வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது.அதேபோல தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு கிராமத்தில் ரயில்வே கீழ்பாலம் அருகே சாலை ஓரத்தில் செல்லும் மின்பாதையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் அனைத்தும்அருகில் உள்ள தேக்கு மரம், தென்னை மரங்களில் உரசிக் கொண்டிருக்கிறது. மின்கம்பிகள் உரசி தேக்குமரத்தில் பட்டைகளே உராய்ந்துவிட்டது. அந்த மரங்களை யாராவது தொட்டால் என்னாகும்?

இதுபற்றியும் மின்வாரிய அதிகாரிகள் முதல் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் வரை படங்களுடன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உயிர்பலிக்காக காத்திருக்கும் மின்கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உயிர்பலியாகும் முன்பே மாற்றி அமைத்தால் நல்லது.

electicity negligence Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe