Skip to main content

மின்சார வாரியத்தின் அலட்சியம்; பலியான வாலிபர்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

electricity  board wire connection issue in perumbakkam 

 

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 42), பெரும்பாக்கத்தில் சிற்றுண்டி உணவக கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன், இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு விட்டு நேதாஜி மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்துள்ளது.  இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து. உயிரிழந்தார்.

 

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அருகில் உடலை சாலையிலேயே வைத்துக் கொண்டு பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் தான் விபத்து நேரிட்டதாகவும், பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை கைது செய்யவும் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

போலீசாரின் பேச்சுவார்த்தையில் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மின்வாரியம் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வீடு, மற்றும் நிவாரணம் வழங்கவும், குழந்தைகளின் எதிர்கால கல்வியை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போராட்டக்காரர்களிடம் தாம்பரம் தாசில்தார் கவிதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.