Advertisment

“51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு,ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு” - அன்புமணி

Electricity Board operates loss Rs. 6920 crore even after 96% increase revenue

வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

Advertisment

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021-22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

2023-24ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டது. அது நேரடியாக மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசால் நேரடியாக செலுத்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் குறையவில்லை. அதனால், 2023-24ஆம் ஆண்டிலாவது மின்சாரவாரியம் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அந்த ஆண்டிலும் மின்சாரவாரியம் தொடர்ந்து இழப்பைத் தான் சந்தித்திருக்கிறது.

2023-24ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.97,757 கோடி ஆகும். இது 2021-22ஆம் ஆண்டின் வருவாயான ரூ.49,872 கோடியை விட 96%, அதாவது ரூ.47,885 கோடி அதிகமாகும். இடைப்பட்ட காலத்தில் மின் வணிகம் 1137.8 கோடி அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டின் சராசரி கட்டணம் ரூ.5.60 என்பதால், அதன் மூலம் கிடைத்த ரூ.6371 கோடியை கழித்தாலும் கூட, கட்டண உயர்வின் மூலம் மட்டும் இரு ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.41,514 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதன் காரணமாக மின்சார வாரியம் குறைந்தது ரூ.32 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரு ஆண்டுகளில் வருவாய் ரூ.41,514 கோடி அதிகரித்திருந்தாலும் கூட, இழப்பு ரூ.2210 கோடி மட்டும் தான் குறைந்திருக்கிறது என்றால், கட்டண உயர்வால் கூடுதலாக கிடைத்த மீதமுள்ள ரூ.39,304 கோடி எங்கே சென்று மாயமானது?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான். தமிழ்நாடு மின்வாரியம் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்ட முடியும். ஆனால், அவ்வாறு நடந்தால் ஆட்சியாளர்களால் கமிஷன் வாங்கி கோடிகளை குவிக்க முடியாது என்பதற்காகவே மின்திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். மின்சாரத்தை வாங்குவதில் எந்த அளவுக்கு கொள்ளை நடந்திருக்கிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே தெளிவாக நிரூபிக்கின்றன.

2021-22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த மின் வணிகம் 8200.20 கோடி யூனிட் ஆகும். இதில் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது 7262.90 கோடி யூனிட். அதாவது மின்வாரியத்தின் மொத்த வணிகத்தில் 12.91% மட்டும் தான் மின்வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 87.09% மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. 2023-24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் மின்வாரியம் அதன் மொத்த வணிகத்தில் சுமார் 90% மின்சாரத்தை வெளியிலிருந்து அதிக விலைக்கு வாங்கினால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும்?

வெளியிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு இரு ஆண்டுகளில் 14% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், செலவு 70% அதிகரித்திருக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023-24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆட்சியாளர்களுக்கு தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்காகவே இந்த அளவுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர். ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும் என்பதை பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்தக் காலத்தில் வெறும் 21% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், அதற்கான ஆன செலவு மட்டும் 77% உயர்ந்திருக்கிறது. இதுவும் எங்கேயும் நடக்காத அதிசயம். 2021-22ஆம் ஆண்டில் 2552 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.14,061 கோடி, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 செலவாகியுள்ளது. ஆனால், 2023 - 24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது. இது 46% உயர்வு ஆகும். சந்தனக் கட்டைகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தால் கூட இந்த அளவு செலவாகாது எனும் நிலையில், நிலக்கரி அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு அதிக செலவாகியிருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்த பிறகும் ரூ.6920 கோடி இழப்பில் இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

anbumani electicity Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe