Skip to main content

ரத்த கரையுடன் பிடிபட்ட லஞ்சப் பணம்; மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Electricity Board engineer sentenced to 4 years in prison accepting a bribe of Rs. 10,000!

பாளையங்கோட்டை மகாராஜா நகர் சிவந்திபட்டி ஏரியாவை சேர்ந்தவர் 40 வயதான சிவபாரதி. இவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் எலக்ட்ரிக் உலர் சலவையகம் அமைக்க  முடிவு செய்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வல்லநாட்டில் உள்ள மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மின் இணைப்புக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார். 

இதையடுத்து சில தினங்கள் கழித்து மே 5 ஆம் தேதி அந்த அலுவலகத்தில் இருந்த மின் வாரிய ஜூனியர் இன்ஜினியர் திருப்பதியை நேரில் சந்தித்து மின் இணைப்பு குறித்து விவரம் கேட்டுள்ளார். பலமுறை அலைக்கழித்த திருப்பதி, ஒரு கட்டத்தில் நியூ கனெக்சன் கொடுப்பதற்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார்.  ஒரு வாரத்திற்குள் அட்வான்ஸ் பேமெண்டாக ரூ.10,000 தருமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவ பாரதி 2010 ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அப்போதைய விஜிலென்ஸ் டி.எஸ்.பி. தங்கச்சாமி வழக்குப் பதிவு செய்தார். தூத்துக்குடி மூன்றாவது மைல் சங்கர் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து லஞ்சத்தை தருமாறு இன்ஜினியர் திருப்பதி,  சிவ பாரதியிடம் தெரிவித்துள்ளார். அதன்படி சிவ பாரதி மூன்றாவது மைல் பகுதியில் வைத்து ரசயான பவுடர் தடவிய புதிய 500 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதனைத் திருப்பதி வாங்கியவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டீம் இன்ஜினியர் திருப்பதியை சுற்றி வளைத்தனர்.

விஜிலென்ஸ் போலீசை பார்த்ததும் பதற்றமடைந்த இன்ஜினியர் திருப்பதி தனது கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்படியே கசக்கி சுருட்டி வாயில் போட்டு விழுங்கியுள்ளார். புதிய ரூபாய் நோட்டுகள் விறைப்பாகவும் கத்தையாகவும் இருந்ததால் அவை உள்ளே செல்லாமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. விஜிலென்ஸ் போலீசார் பணத்தை விழுங்க விடாமல் தடுத்து இன்ஜினியர் திருப்பதியின் வாயில் கையை நுழைத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தனர். அப்போது இன்ஜினியர் கடித்ததால் போலீசார் விரல்களில் காயம் ஏற்பட்டும் வாயிலிருந்து இழுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் பல் ஈறுகளில் இருந்த ரத்தக்கரையோடு வெளியே வந்தன.  

இதனைத் தொடர்ந்து போலீசார் திருப்பதியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 15 வருடங்களாக நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. வசித்குமார் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் திருப்பதிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்புக் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜரானார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்