/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vizhupuram-in_6.jpg)
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் உள்ளது கீழ் எடையாளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலச்சந்தர். இவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஏற்கனவே பாலச்சந்தர் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். அதிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்வதற்காக மின்சார வாரிய அதிகாரிகளிடம் இலவச மின் இணைப்பு கேட்டு 2001ஆம் ஆண்டு திண்டிவனம் மின்சார வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து இருந்தார்.
18 வருடங்களுக்குப் பிறகு பாலச்சந்தருக்கு தற்போது இலவச மின்சார மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் மிகவும் சந்தோஷத்துடன் உரிய ஆவணங்களுடன் மயிலத்திலுள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். அங்கிருந்த உதவிப் பொறியாளரான புருஷோத்தமன் என்பவர், இலவச மின் இணைப்பு வழங்க வேண்டுமானால், தமக்கு 27 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என பேரம் பேசியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலச்சந்தர் இதுகுறித்து நேற்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாலசந்தரிடம் ரசாயன பொடி தடவிய பணத்தைக் கொடுத்து லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் புருஷோத்தமனிடம் அந்தப் பணத்தைக் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று மாலை உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமனை செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு தாங்கள் கேட்ட லஞ்சப் பணம் கையில் உள்ளது, தங்களை எப்போது சந்தித்துக் கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு புருஷோத்தமன், தான் இப்போது செண்டூரில் உள்ள மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வெளியே இருப்பதாகவும் அங்கு வந்து பணத்தைக் கொடுக்கும்படியும் கூறியுள்ளார். புருஷோத்தமன் அதன்படி விவசாயி பாலச்சந்தர் செண்டூரிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த புருஷோத்தமனிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி யுவராஜ், இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் விஜய், தாஸ், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய டீம் புருஷோத்தமனை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக வளைத்துப் பிடித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
பின்னர், அவரை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நகராட்சியில் பணிபுரியும் நகர அமைப்பு விரிவாக்க அலுவலர்லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டதைதொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தொடர்ந்து சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)