
திருவள்ளூர் மாவட்டம் அன்னனூர் பணிமனையில் இருந்து நேற்று காலை சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கி செல்ல வேண்டிய மின்சார ரயில் ஒன்று ஆவடி ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 9 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், வந்தே பாரத் உள்ளிட்ட அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய 50 ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சம்பவம் நடந்த உடனே விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் சிக்னலை மீறி 200 மீட்டர் தொலைவுக்கு சென்றதால் ரயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
மீட்பு பணியில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சுமார் 14 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு இந்த ரயில் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ரயில் விபத்து குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் கவன குறைவாக செயல்பட்டதாக கூறி ரயில் ஓட்டுநர் ரவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.