/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/656_9.jpg)
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஐவதுகுடி பள்ளக்காடு. இந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இறந்தவரின் படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த சிலர் இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கரா பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். இறந்து கிடந்தவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த 61 வயது ஏழுமலை என்பதும் இவர் தற்போது நீமங்கலம் கிராமத்தில் குடும்பத்தினர்கள் வசித்து வருவதாகவும் கொங்கராபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த இவர் மீது கள்ளக்குறிச்சி திட்டக்குடி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில், 13 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
பகலில் இறைச்சிக் கடையில் வியாபாரம் செய்துவிட்டு, இரவில் கிராமங்களுக்குள் சென்று வீடுகளில் திருடுவது ஏழுமலையின் தொழிலாக செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடு இரவு நேரத்தில் ஏழுமலை, ஐவதுகுடி கிராமத்திற்கு திருடுவதற்காக வந்துள்ளார். அந்த ஊரில் உள்ள வீரமுத்து மனைவி, பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஏழுமலை திருட முயற்சி செய்யும்போது, கடா முடா சத்தம் கேட்ட பழனியம்மாள் விழித்துக் கொண்டார். அவர் திருடன்..... திருடன்..... என்று சத்தம் போட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன ஏழுமலை வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பழனியம்மாள் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை துரத்தியுள்ளனர். ஆனால் திருடன் ஏழுமலை காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி விட்டார். இந்த நிலையில் அவர் தப்பி ஓடிய வழியில் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது விவசாய நிலத்தில் மரவள்ளி பயிறு செய்திருந்தார் அதை வனவிலங்குகள் அழித்துவிடும் என்பதால் அந்த பயிரை பாதுகாக்க நிலத்தைச் சுற்றி இரவில் மின் வேலி போட்டு இருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடிய ஏழுமலை, மின்வேலியில் சிக்கி உயிரழுந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் ஏழுமலை குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழுமலை உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)