ADVERTISEMENT

டாக்டர்களை ஏமாற்றிய தேர்தல்!

09:25 PM May 25, 2019 | kalaimohan

ADVERTISEMENT

பா.ம.க.வில் சாதாரண பொறுப்பு வகித்துப் பின்னர் வெளியேறிய அந்த நண்பர் அரசியலே வெறுத்துப்போய் ஒதுங்கிவிட்டார். அரசியல் விமர்சகரான அவர், டாக்டர்களை இந்தத் தேர்தல் ஏமாற்றியது குறித்தும், ‘தோல்வி கண்ட அரசியல் தலைவர்கள் திரும்பிப் பார்க்கவேண்டும்; சுயபரிசோதனை செய்ய வேண்டும்.’ என்றார் ஆதங்கத்துடன். அவரது பொதுவான கருத்துக்கள் இதோ-

ADVERTISEMENT

1989 நாடாளுமன்ற தேர்தல் முதல் பாமக தேர்தல் களத்தில் இருந்தாலும், அந்தக் கட்சியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் அடிஎடுத்து வைத்தது 1998 தேர்தலில்தான். அப்போது சிதம்பரம், தருமபுரி, வந்தவாசி, வேலூரில் வென்றது பாமக. மயிலாடுதுறையில் மட்டும் 2-ஆம் இடத்தை பிடித்தது.

ஓராண்டில் மீண்டும் தேர்தல் வந்ததால் 1999-ல் நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 8 இடங்களில் போட்டியிட்டது. இதில் முந்தைய 4 தொகுதிகளோடு, ஏ.கே.மூர்த்தி செங்கல்பட்டில் வென்றதால் பாமக எம்பிக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, திண்டிவனம், தருமபுரி, அரக்கோணம், சிதம்பரம், செங்கல்பட்டு மட்டுமின்றி புதுச்சேரியிலும் வென்றதால் பாமக எம்.பிக்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. 2004-ஆம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமக அத்தனை இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.

2014-ல் பாஜக-தேமுதிக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவையையும் சேர்த்து 9 இடங்களில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் மட்டும் அன்புமணி வென்றார்.

தொடர் தோல்வியால் துவண்டு போன ராமதாஸ், இனி திராவிட கட்சிகளோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்று பேசி வந்தார். இதனால், 2016 சட்டமன்ற தேர்தலில் "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற புதுகோஷத்தோடு 230 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமகவால். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 5.4% வாக்குகளைப் பெற்றது.

கடந்த 20 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளையும் விமர்சித்த ராமதாஸ், அதிமுகவை மிகக் கடுமையாகவே விமர்சித்து ‘கழகத்தின் கதை’ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார். ஜெயலலிதாவை மட்டுமல்ல, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என எல்லோரையும் வசைபடினார். அன்புமணி ஒருபடி மேலே போய், "எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா? 2 பேரும் மானங்கெட்டவனுங்க, டயர் நக்கிகள்'' என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கரைத்து ஊற்றினார்.

ராமதாஸின் எதிரி யார் என்றால் அவரது போக்கும் நாக்கும் தான். கொண்ட கொள்கையில் மாற மாட்டேன் என்பதைப்போலவே அவரது பேச்சு இருக்கும். ஆனால், அவரது நடத்தை அதற்கு நேர்மாறாக இருக்கும். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசியலுக்கு வந்தால், முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்றார். ஆனால், மகனை 3-வது முறையாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இப்போது தருமபுரியில் நிறுத்தினார். ஒருவேளை தோல்வி கண்டால் ராஜ்யசபாவுக்கு அனுப்ப முன்கூட்டியே அதிமுகவிடம் அக்ரீமென்டும் போட்டுவிட்டார்.

இனியும் தனித்து நின்று பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பாமக, இந்தத் தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டது. 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு 5.42% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதில் அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வாக்கும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுகவை முந்தைய நாள் வரை விமர்சித்துவிட்டு, மறுநாள் கூட்டணி ஒப்பந்தம் போடும் போது, "கூட்டணியில் நாணல்; ஆனால் கொள்கையில் தேக்கு" என்றார். ஆனால் மக்கள் அளித்த வாக்கு பாமகவுக்கு எதிராக இருக்கிறது. 7 தொகுதிகளிலும் மாம்பழத்தை எதிர்த்து உதய சூரியன் தான் வென்றிருக்கிறது.

20 ஆண்டுகளாக திராவிட அரசியலை எதிர்ப்பது, பின்னர் தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மாற்றி அந்த கட்சிகளோடு கூட்டணி வைப்பது ராமதாஸின் நிலைப்பாடு. இதனால், மக்களிடையே ஒருவித அதிருப்தியே நிலவுகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

எனவே, பாமக நிறுவனர் ராமதாஸ், "தாம் இதற்கு முன்னர் என்னவெல்லாம் பேசினோம். எப்படி எல்லாம் நடந்துகொண்டோம், மக்கள் நமக்கு என்ன அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டும். அதற்கான நேரம் இதுதான்!

கிருஷ்ணசாமிக்கு எட்டாக் கனியாகிப் போன எம்.பி பதவி!

1996-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் டாக்டர் கிருஷ்ணசாமி. அதன்பிறகு புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி, தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டாலும், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 2014-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதுபோல், தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் களமும் கிருஷ்ணசாமிக்குப் புதிதல்ல. இதே தொகுதியில் அவர் ஆறு தடவை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறார். இந்த முறை அதிமுக கூட்டணியில் களம் இறங்கினார். ஆனால், திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோற்றுப் போனார்.

எப்படியாவது எம்.பியாகிவிட வேண்டும் என்ற கனவோடு, ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக அல்லது இதர கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் இறங்கினாலும், கிருஷ்ணசாமிக்கு மிஞ்சுவது தோல்வியாகவே இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT