Skip to main content

மாநிலங்களவை தேர்தல்; தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 7 பேரின் வேட்புமனு தள்ளுபடி!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

ர

 

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக கூட்டணி நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், அதிமுக இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கைப்பற்றும். அந்த வகையில், திமுக மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது. திமுக சார்பில் ராஜேஷ்குமார், கிரி ராஜன், கல்யாண சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தருமர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் தேர்தல் நடைபெறுமா? வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் பிரதான கட்சிகளின் சார்பில் இவர்கள் ஆறு பேரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால் இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குச் செல்ல இருக்கிறார்கள். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தன. இன்று நடைபெற்ற இந்த வேட்புமனு பரிசீலனையின் போது சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. குறிப்பாகத் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தாக்கல் செய்த மனுவும் இதில் அடக்கம். போட்டியிடும் ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை 10க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் முன்மொழியவில்லை என்பதால் இவர்கள் 7 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்