சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Advertisment

d

மக்களவை பொதுத்தேர்தல் கால அட்டவணை கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

Advertisment

இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வரும் தேர்தலில் அரசியல்கட்சியினருக்கு பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் முக்கிய பிரச்சார ஊடகங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

கல்வித்துறைக்கு உள்பட்ட அனைத்து கல்வி அலுவலகங்கள், பள்ளிகள், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர். அரசுப் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர்களில் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு நலத்திட்ட விளம்பரங்களை அழிக்க வேண்டும். தலைவர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகளை துணிகள் மூலம் மறைக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இணையதளத்தின் முகப்பில் அரசியல் தலைவர்கள் படங்கள் இருப்பின், அதையும் நீக்க வேண்டும். பள்ளிகளில் இறை வணக்கத்தின்போது வாக்களிப்பின் அவசியம் குறித்து விளக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.