Skip to main content

 தொகுதி அறிவோம்-இடைத்தேர்தல்:சோளிங்கர் தொகுதி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயம், நெசவாளிகளை மட்டும்மே கொண்ட தொகுதி சோளிங்கர். மாவட்ட தலைநகரத்தில் இருந்து தொலைவில் உள்ள தொகுதியது. தொகுதியில் வன்னியர்கள், தலித்கள், முதலியார் சாதியினர் பெரும்பான்மையாக உள்ளனர். சாதி பாசம் புரையோடிப்போன மக்கள் அதிகளவில் இந்த தொகுதியில் அன்று முதல் இன்று வரை வாழ்கிறார்கள். தேர்தல் களத்தில் சமுதாயமே வெற்றியை தீர்மானிக்கிறது.

 

election

 

1952 பொதுவுடமை கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம், 1957ல் காங்கிரஸ் பாஸ்கர், 1962 காங்கிரஸ் பொன்னுரங்கம் என்பவர் எம்.எல்.ஏக்களாக இருந்தனர். 1967ல் திமுகவை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் வெற்றி பெற்றார். 1971ல் காங்கிரஸ் பொன்னுரங்கம் வெற்றி பெற்றார். அதிமுக தொடங்கப்பட்டதும் நிலைமை தலைகீழானது. 1977ல் ராமசாமி, 1980ல் சி.கோபால், 1984ல் சண்முகம் என தொடர்ச்சியாக அதிமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

 

 

 

1989ல் காங்கிரஸ் முனிரத்தினம், 1991ல் காங்கிரஸ் முனிரத்தினம், 1996ல் தமாக சார்பில் முனிரத்தினம், 2001ல் அதிமுக வில்வநாதன், 2006ல் அருள்அன்பரசு, 2011ல் தேமுதிக மனோகர், 2016ல் அதிமுக பார்த்திபன் வெற்றி பெற்றனர்.

 

 

 

இந்த தொகுதியில் தங்களுக்கு சரியான நிர்வாகிகள் இல்லையென்பதால் கூட்டணிக்கு தள்ளிவிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது திமுக. அதனால் காங்கிரஸ் என்றால் முனிரத்தினம் குடும்பம், அதிமுக என்றால் கோபால் குடும்பம் என கோலோச்சுகின்றனர்.

 

election

 

இந்த தொகுதியில் வெற்றி பெற்ற 2006ல் வெற்றி பெற்ற அருள்அன்பரசு, 2011ல் வெற்றி பெற்ற மனோகரன் இருவரும் வெளியூர்க்காரர்கள் என்பதால் எதுவும் செய்யவில்லை எனச்சொல்லும் மக்கள். உள்ளூரை சேர்ந்தவர்களான காங்கிரஸ் முனிரத்தினம், அதிமுக கோபால், அவரது மகன் பார்த்திபன் வரை யாரும் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுப்படவில்லை என்பது குற்றச்சாட்டு. நரசிம்மர் கோயிலுக்கு ரோப்கார் அமைத்து தரவேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை. அது நிறைவேறாமலே உள்ளது. அதேபோல் போக்குவரத்து டெப்போ, பேருந்து நிலைய வரிவாக்கம் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள்.

 

 

 

இந்த 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அசோகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுக சம்பத் என்பவரை நிறுத்தியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவான பார்த்திபன், தற்போது அமமுகவில் உள்ளார். அவர் அல்லது அவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் நிறுத்தப்படுவார் என்கிறார்கள்.

 

 

 

இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 59 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். திமுக முதலியார் சமுதாய வாக்குகளை குறிவைத்தும், அதிமுக வன்னிய சமுதாய வாக்கை குறிவைத்துள்ளது. 

 

 

சோளிங்கர் நகரில் பிரபலமான நரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதே நரசிங்கபெருமாள் கதை. அதுப்போல் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறவைக்க போகிறார்கள் என்பது மக்கள் மனதில் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்