election commission chennai high court

80 வயது முதியோர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தேர்தலின்போது நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக, தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. தபால் ஓட்டைப் பெறுவதற்காக, வாக்குச்சாவடி அதிகாரிதான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதால்,முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்குப் பொருளாதார சுமை அதிகரிக்கும் எனவும் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேபோல, மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் துரை என்பவர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், ‘80 வயதுக்கு மேலானவர்களைச் சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. இந்தப் புதிய நடைமுறை, கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும். இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 86 வயது முதியவர் துரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார்.

தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘இந்தப் புதிய நடைமுறை காரணமாக, ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். இதன் மூலம் 30 சதவீதம் பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்யக் கூடும். தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது.’ என்று குறிப்பிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர். அதேசமயம், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.