
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று (27/03/2021) கரூர் செல்லும் சாலையில் உள்ள குடமுருட்டி பகுதியில், 9- வது வார்டில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கறுப்புக் கொடியைத் தங்களுடைய வீடுகளில் கட்டி அவருக்குப் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், தங்களுடைய பகுதிக்குள் நீங்கள் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம் என்றும், கடந்த ஐந்து வருடத்திற்கு முன்புதான் நாங்கள் உங்களைப் பார்த்தோம் என்றும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல், இன்று (27/03/2021) காலை மேலசிந்தாமணி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய பகுதிக்குள் நுழைந்து வாக்குக் கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தி அங்கிருந்து அவரை வெளியேற வற்புறுத்தியுள்ளனர்.