'Election Boycott'-OPS?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஓபிஎஸ் அணி தேர்தலை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜக இடையே மூன்று முறை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து இதற்காக எவ்வளவு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், ஒரே முடிவாக தேர்தலை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு 'அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம்' என நடத்திவரும் நிலையில் ஒருவேளை பாஜகவின் நிபந்தனைப்படி தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதன் பிறகு அதிமுக மற்றும் இரட்டை இலை ஆகியவைக்கு ஓபிஎஸ் உரிமைகோர முடியாது என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.