ELECTION ADVERTISEMENT CANDIDATES ELECTION COMMISSION

ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரச் செலவினங்களைக் கண்காணித்துக் கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கீட்டாளருக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்காணிப்பதற்கும், தேர்தல் விளம்பரச் செலவினங்களைக் கணக்கிடுவதற்கும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண். 128- ல் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இக்கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. மேலும், கேபிள் தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்கும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ அல்லது அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகிறதா என்பதைக்கண்காணிப்பதற்கும் இவ்வலுவலக முன் அறையில் ஊடகக்கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு, இக்கண்காணிப்பு குழுவால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப். 6- ஆம் தேதி வரை 24 மணி நேரமும் தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவரை சார்ந்தவர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், எஃப்.எம்ரேடியோக்களில் விளம்பரம் செய்ய விரும்புவோர், அந்த விளம்பரத்தினை வெளியிடுவதற்கு முன் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பித்து, உரிய அனுமதி பெற்று அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரம் வெளியிட வேண்டும். ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில், விளம்பரம் வெளியிடுவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.